ترجمة سورة الواقعة

Jan Trust Foundation - Tamil translation

ترجمة معاني سورة الواقعة باللغة التاميلية من كتاب Jan Trust Foundation - Tamil translation.


மாபெரும் நிகழ்ச்சி(யான இறுதிநாள்) ஏற்பட்டால்

அந்நிகழ்ச்சியைப் பொய்யாக்குவது எதுவுமில்லை.

அது (தீயோரைத்) தாழ்த்தி விடும், (நல்லோரை) உயர்த்தி விடும்.

பூமி நடுக்கத்தால் நடுக்கமடையச் செய்யும் போது.

இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது,

பின்னர், அது பரப்பப்பட்ட புழுதி ஆகிவிடும்.

(அப்போது) நீங்களும் மூன்று பிரிவினர்களாகி விடுவீர்கள்.

(முதலாமவர்) வலது பாரிசத்திலுள்ளோர் - வலது பாரிசத்துக்காரர் யார்? (என்பதை அறிவீர்களா?)

(இரண்டாமவர்) இடது பாரிசத்திலுள்ளோர் - இடது பாரிசத்திலுள்ளோர் யார்? (என அறிவீர்களா?)

(மூன்றாமவர் நம்பிக்கையில்) முந்தியவர்கள் (மறுமையிலும்) முந்தியவர்களே யாவார்கள்.

இவர்கள் (இறைவனுக்கு) அண்மையிலாக்கப்பட்டவர்கள்.

இவர்கள் பாக்கியங்களுள்ள (சுவனச்) சோலைகளில் இருப்பர்.

முதலாமவரில் ஒரு பெருங் கூட்டத்தினரும்,

பின்னவர்களில், ஒரு சொற்பத்தொகையினரும் -

(பொன்னிழைகளால்) ஆக்கப் பெற்ற கட்டில்களின் மீது -

ஒருவரையொருவர் முன்னோக்கியவாகளாக, அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள்.

நிலையான இளமையுடைய இளைஞர்கள் (இவர்கள் பணிக்காகச்) சுற்றிக் கொண்டே இருப்பார்கள்.

தெளிந்த பானங்களால் நிறம்பிய கிண்ணங்களையும், கெண்டிகளையும், குவளைகளையும் கொண்டு (அவர்களிடம் சுற்றி வருவார்கள்).

(அப்பானங்களைப் பருகும்) அவர்கள் அவற்றினால் தலை நோய்க்காளாக மாட்டார்கள், மதிமயங்கவுமாட்டார்கள்.

இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் -

விரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்).

(அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர்.

மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அவர்கள் (இருப்பார்கள்).

(இவையாவும்) சுவர்க்க வாசிகள் (இம்மையில் செய்து கொண்டிருந்த) செயல்களுக்கு கூலியாகும்.

அங்கு இவர்கள் வீணானதையும், பாவமுண்டாக்குவதையும் (கொண்ட பேச்சுகளைச்) செவியுற மாட்டார்கள்.

'ஸலாம், ஸலாம்' என்னும் சொல்லையே (செவியுறுவார்கள்).

இன்னும் வலப்புறத்தார்கள் - வலப்புறத்தார்கள் யார்? (என்பதை அறிவீர்களா?)

(அவர்கள்) முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும்:

(நுனி முதல் அடிவரை) குலை குலையாகப் பழங்களுடை வாழை மரத்தின் கீழும்:

இன்னும், நீண்ட நிழலிலும்,

(சதா) ஒலித்தோடிக் கொண்டிருக்கும் நீரின் அருகிலும்,

ஏராளமான கனிவகைகளின் மத்தியிலும் -

அவை அற்றுப் போகாதவை, (உண்ணத்) தடுக்கப்படாதவை -

மேலும், உன்னதமான விரிப்புகளில் (அமர்ந்திருப்பர்).

நிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி,

அப்பெண்களைக் கன்னிகளாகவும்,

(தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும்,

வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்).

முன்னுள்ளோரில் ஒரு கூட்டமும்,

பின்னுள்ளோரில் ஒரு கூட்டமும் (வலப்புறத்தோராக இருப்பார்கள்).

இடது பாரிசத்திலுள்ளவர்களோ இடது பாரிசத்திலுள்ளவர்கள் யார்? (என்று அறிவீர்களா?)

(அவர்கள்) கொடிய அனல் காற்றிலும், கொதிக்கும் நீரிலும் -

அடர்ந்து இருண்ட புகையின் நிழலிலும் இருப்பார்கள்.

(அங்கு) குளிர்ச்சியுமில்லை, நலமுமில்லை.

நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் (உலகத்தில்) சுகபோகிகளாக இருந்தனர்.

ஆனால், அவர்கள் பெரும் பாவத்தின் மீது நிலைத்தும் இருந்தனர்.

மேலும், அவர்கள், "நாம் மரித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விட்டாலும், நாம் மீண்டும் நிச்சயமாக எழுப்பப்படுவோமா?" என்று கேட்டுக் கொண்டு இருந்தனர்.

"அல்லது, முன்னோர்களான நம் தந்தையருமா? (எழுப்பப்படுவர்?" என்றும் கூறினர்.)

(நபியே!) நீர் கூறும்: "(நிச்சயமாக உங்களில்) முன்னோர்களும், பின்னோர்களும்.

"குறிப்பிட்ட நாளின் ஒரு நேரத்தில் (நீங்கள் யாவரும்) ஒன்று கூட்டப்படுவீர்கள்.

அதற்குப் பின்னர்: "பொய்யர்களாகிய வழி கேடர்களே! நிச்சயமாக நீங்கள்,

ஜக்கூம் (என்னும் கள்ளி) மரத்திலிருந்தே நீங்கள் புசிப்பவர்கள்.

ஆகவே, "அதைக் கொண்டே வயிறுகளை நிரப்புவீர்கள்.

அப்புறம் அதன்மேல் கொதிக்கும் நீரையே குடிப்பீர்கள்.

"பின்னும் ஹீம் - தாகமுள்ள ஒட்டகை குடிப்பதைப் போல் குடிப்பீர்கள்."

இதுதான் நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்கு விருந்தாகும்.

நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா?

(கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?

அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?

உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம், எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது.

(அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல).

முதல் முறையாக (நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள் - எனவே (அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு பெற வேண்டாமா?

(இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா?

அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா?

நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் - அப்பால் நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள்.

"நிச்சயமாக நாம் கடன் பட்டவர்களாகி விட்டோம்.

"மேலும், (பயிர்களிலிருந்து எதுவும் பெற முடியாதவர்களாகத்) தடுக்கப்பட்டு விட்டோம்" (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்).

அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா?

மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா?

நாம் நாடினால், அதைக் கைப்புள்ள தாக்கியிருப்போம்; (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?

நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா?

அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா?

நாம் அதனை நினைவூட்டுவதாகவும், பயணிகளுக்கு பயனளிக்கப்பதற்காகவும் உண்டாக்கினோம்.

ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.

நட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன்.

நீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக இது மகத்தான் பிரமாணமாகும்.

நீச்சயமாக, இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆன் ஆகும்.

பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது.

தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள்.

அகிலத்தாரின் இறைவனால் இது இறக்கியருளப்பட்டது.

அவ்வாறிருந்தும், (குர்ஆனின் மகத்தான) இச்செய்தி பற்றி நீங்கள் அலட்சியமாக இருக்கிறீர்களா?

நீங்கள் பொய்ப்பிப்பதை (இறைவன் தந்த) உங்கள் பாக்கியங்களுக்கு (நன்றியாக) ஆக்குகின்றீர்களா?

மரணத் தறுவாயில் ஒருவனின் (உயிர்) தொண்டைக் குழியை அடையும் போது -

அந்நேரம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆயினும், நாமோ அவனுக்கு உங்களை விட சமீபமாக இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்கிறீர்களில்லை.

எனவே, (மறுமையில் உங்கள் செயல்களுக்கு) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள் என்று இருந்தால் -

நீங்கள் உண்மையாளராக இருப்பின், (அவ்வுயிரை) மீளவைத்திருக்கலாமே!

(இறந்தவர் இறைவனுக்கு) நெருக்கமானவர்களில் நின்றும் இருப்பாராயின்.

அவருக்குச் சுகமும், நல்லுணவும் இன்னும் பாக்கியமுள்ள சுவர்க்கமும் உண்டு.

அன்றியும், அவர் வலப்புறத்துத் தோழராக இருந்தால்,

"வலப்புறத்தோரே! உங்களுக்கு "ஸலாம்" உண்டாவதாக" (என்று கூறப்படும்).

ஆனால் அவன் வழிகெட்டுப் பொய்யாக்குவோரில் (ஒருவனாக) இருந்தால்

கொதிக்கும் நீரே, அவனுக்கு விருந்தாகும்.

நரக நெருப்பில் தள்ளப்படுவது (விருந்தாகும்).

நிச்சயமாக இதுதான் உறுதியான உண்மையாகும்.

எனவே (நபியே!) மகத்தான உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.